< Back
உலக செய்திகள்
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி வந்த சீன கப்பல்- இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது
உலக செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி வந்த சீன கப்பல்- இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது

தினத்தந்தி
|
22 Aug 2022 5:42 PM IST

சீன உளவு கப்பல் கடந்த 16 ஆம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாரம் அங்கு நிறுத்தப்பட்ட நிலையில் இன்று புறப்பட்டு சென்றுள்ளது.

கொழும்பு,

சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் உள்ளன. அவற்றில், 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பலும் அடங்கும். அது, 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. அதில், விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும். இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும்.

இத்தகைய கப்பல், கடந்த 11-ந் தேதி இலங்கைக்கு வருவதாக இருந்தது. இலங்கையின் தென்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களை கொண்டு, அந்த துறைமுகம் மேம்படுத்தப்பட்டது. கடனை திருப்பி செலுத்த முடியாததால், சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டது.

எரிபொருள் நிரப்புவதற்காக ஆகஸ்டு 16-ந் தேதி வரை கப்பலை அங்கு நிறுத்திவைப்பதாக இருந்தது. ஆனால், அதன் வருகையால் தென் இந்தியாவில் உள்ள ராணுவ, கடற்படை நிலையங்களுக்கும், கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்தியா கருதியது. கப்பலின் வருகைக்கு இலங்கையிடம் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. அம்பாந்தோட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில், அனுமதியை எதிர்பார்த்து கப்பல் காத்திருந்தது.

பின்னர், ராணுவ அதிகாரிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்தினார். இறுதியாக, கடந்த 13-ந் தேதி இலங்கை அரசு, பாதுகாப்பு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து சீன உளவு கப்பல் கடந்த 16 ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 6 நாட்கள் நங்கூரமிட்ட சீன கப்பல், இன்று துறைமுகத்தில் இருந்து கிளம்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது. சீனாவின் ஜியாங் யின் துறைமுகத்தில் இந்த கப்பல் அடுத்து நிறுத்தப்பட உள்ளது என்று சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்