ஆய்வு கப்பல் அருகே பறந்து சென்ற சீன கடற்படை ஹெலிகாப்டர்: ஜப்பான் எச்சரிக்கை
|ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்படை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில், சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
டோக்கியோ,
கிழக்கு சீன கடற்பகுதியில் ஜப்பானிய கடலோர பகுதியில் 370 கி.மீ. தொலைவுக்கு அந்நாட்டுக்கான சிறப்பு பொருளாதார மண்டல பகுதி உள்ளது. தங்களது பகுதிக்கு உட்பட்ட அந்த இடத்தில் ஜப்பானின் ஆராய்ச்சி கப்பல் இயங்கி கொண்டிருந்தது.
இந்த நிலையில், சீனாவின் கடற்படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று, ஜப்பானின் ஆய்வு கப்பலை உளவு பார்க்கும் வகையில், பறந்து சென்று உள்ளது என கூறப்படுகிறது. இதனை ஜப்பானின் மீன்வள கழகம் தெரிவித்து உள்ளது.
அந்த ஹெலிகாப்டர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் கல்வி கழகத்தின் யோகோ மாரு பகுதியின் பின்னால் இருந்து வந்து, கப்பலை 150-200 மீட்டர் நெருக்கத்தில் அணுகியுள்ளது.
ஒகினாவா பகுதியின் வடமேற்கே கடல் பரப்பில் இருந்து 30 மீட்டர் உயரத்தில் பறந்த அந்த ஹெலிகாப்டர் பின்னர், வேறு இடத்திற்கு சென்றது என ஜப்பானில் இருந்து வெளிவரும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சீனாவின் இந்த செயல் வருத்தத்திற்கு உரியது என்று கூறியதுடன், இதுபோன்ற செயல்களில் மீண்டும் அந்நாடு ஈடுபட கூடாது என சீனாவுக்கு ஜப்பான் அரசு எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.