மகளை கடித்த நண்டை உயிருடன் விழுங்கிய தந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை!
|குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து உயிருடனேயே கடித்து தின்று விழுங்கியுள்ளார்.
பீஜிங்,
சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்தவர் லுா(39). இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு உயிருள்ள நண்டுகளை வாங்கி வந்துள்ளார். அப்போது, நண்டு அவரது மகளை கடித்துள்ளது. இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது.
பின்னர் ஆத்திரம் அடைந்த லுா, குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து உயிருடனேயே கடித்து தின்று விழுங்கியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு லுாவிற்கு கடும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதற்கு காரணம் தெரியாமல் டாக்டர்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், லுா உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவருடைய மனைவி மருத்துவர்களிடம் கூறினார்.
இதன்பின், மருத்துவர்கள் லூவிற்கு ரத்தப் பரிசோதனைகள் செய்தனர். இதில் லுா மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், இதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லுா கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.