< Back
உலக செய்திகள்
சீன கொரோனா தடுப்பூசி திறனற்றது; மக்கள் போராட்டத்தின் பின்னணி... அதிர்ச்சி தகவல் வெளியீடு
உலக செய்திகள்

சீன கொரோனா தடுப்பூசி திறனற்றது; மக்கள் போராட்டத்தின் பின்னணி... அதிர்ச்சி தகவல் வெளியீடு

தினத்தந்தி
|
7 Dec 2022 8:58 PM IST

சீனாவின் கொரோனா தடுப்பூசி திறனற்றது என நிரூபிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.


பீஜிங்,


சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உலக நாடுகளுக்கு முதன்முதலாக தெரிய வந்தது. இதன்பின்னர், உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் நாடுகள் ஈடுபட்டன.

இந்த நிலையில், சர்வதேச கொரோனா தடுப்பூசிகளான மாடர்னா மற்றும் பைசர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு சீனா மறுத்து விட்டது. அதற்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரான சினோவேக் என்ற பெயரிலான தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டது.

அதனை அதிகம் பயன்படுத்தவும் ஊக்கம் அளித்தது. தவிர, சர்வதேச கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராக, அதன் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான பிரசாரத்திலும் ஈடுபட்டது. எம்.ஆர்.என்.ஏ. வகை தடுப்பூசிகளின் திறனுக்கு எதிராகவும் பேசியது.

இந்த எம்.ஆர்.என்.ஏ. வகை தடுப்பூசிகளின் பணியானது, ஏதேனும் தொற்று ஏற்பட்டால் எப்படி நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்க வேண்டிய புரத உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என செல்களுக்கு கற்று கொடுக்கும் பணியை செய்யும்.

ஆனால், சினோவேக் நிறுவனம் டி-செல் தடுப்பூசிகளை உருவாக்கியது. அவற்றால், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்க முடியவில்லை.

இந்நிலையில், சமீப நாட்களாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. நாள்தோறும் 30 ஆயிரம் வரை புதிதாக பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதனால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சூழலை அந்நாடு எதிர்கொண்டு உள்ளது. இதற்காக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்தது. இதனால், ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் கொந்தளித்தனர். தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீன வரலாற்றில் கடந்த தசாப்தத்தில் இல்லாத வகையிலான மக்கள் எதிர்ப்பு போராட்டம், சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசுக்கு சவாலாக அமைந்தது. இதனால், ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க தொடங்கி உள்ளது. இது ஒருபுறம் இருந்தபோதிலும், சீனாவின் தடுப்பூசியான சின்கோவேக் போதிய பயனளிக்கவில்லை என்ற தகவலும் கசிந்துள்ளது.

இதுபற்றி தி சிங்கப்பூர் போஸ்ட் என்ற பத்திரிகை ஆன்லைன் வழியே வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ச்சியாக சீனாவில் பரவி வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அந்நாட்டின் தடுப்பூசிகளின் திறன் பற்றாக்குறை நிரூபிக்கப்பட்டது ஆகியவை சொந்த நாட்டு மக்களுடன், உலக நாடுகளின் மக்களுக்கும் பெரிய சிக்கலை உருவாக்கி உள்ளது என தெரிவித்து உள்ளது.

சமீபத்திய ஆய்வுகள், சீனாவின் சினோவேக் போன்ற தடுப்பூசிகள் மரணத்திற்கு எதிராக 61 சதவீதம் திறனும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிராக 55 சதவீதம் திறனுமே பெற்றிருந்தது.

ஆனால், மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசிகள் இவை இரண்டிலும் 90 சதவீத திறனுடன் உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதுபோன்ற ஆய்வுகள் பொது மக்களிடையே கவலை கொள்ள செய்ததுடன், சீன தடுப்பூசிகளை பெரிய அளவில் புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளியது. இதனால், தனது மிக பெரிய மக்கள் தொகைக்கு சீனாவால் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் முடிவாகவே, பூஜ்ய கொரோனா கொள்கையை அமல்படுத்துவது என்று அரசு முடிவெடுத்து உள்ளது.

இதேபோன்று, சீனாவிடம் இருந்து கொரோனாவேக் தடுப்பூசிகளை துருக்கி போன்ற நாடுகள் ஏற்று கொள்முதல் செய்தன. ஆனால், அந்நாடுகளின் உள்ளூர் மக்களில் பலர், சீன ஆய்வின் மீது நம்பிக்கையற்று அந்த தடுப்பூசிகளை போட்டு கொள்ள முன்வரவில்லை.

கொரோனா பரவல் எண்ணிக்கை பற்றிய தரவுகளும், சர்வதேச அளவில் தனது தடுப்பூசிகளை விற்பதில் மட்டுமே சீனா தீவிரமுடன் இருந்துள்ளது என்ற வகையில் சீனாவின் பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தியது என தி சிங்கப்பூர் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் பிரேசில் நாடுகளும், சீனா வழங்கிய தடுப்பூசிகள் திறனுடன் உள்ளன என முதலில் கூறி, பின்னர் அதில் இருந்து பின்வாங்கியது. தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகள் பின்னர் சீன தடுப்பூசிகளை விட்டு விட்டு, தனது மக்களுக்கு ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசிகளை செலுத்துவதில் கவனம் செலுத்தியது. மலேசியாவும் பைசர் தடுப்பூசிகளுக்கு விரைவாக மாறியது.

இதுபோன்று சர்வதேச அளவில் சீன தடுப்பூசிகளின் நிலை வெளியுலகிற்கு தெரிய வந்தபோதிலும், உள்நாட்டிலேயே அதன் பயன்பாடு மக்களால் எதிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்