நவீன பட்டுப்பாதை திட்டத்தில் ரூ.8.32 லட்சம் கோடி முதலீடு - சீன மாநாட்டில் அதிபர் ஜின்பிங் உறுதி
|நவீன பட்டுப்பாதை திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சீனாவில் உச்சிமாநாடு நடந்தது. அந்த திட்டத்துக்கு மேலும் ரூ.8.32 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என சீன அதிபர் ஜின்பிங் உறுதியளித்தார்.
பீஜிங்,
நவீன பட்டுப்பாதை திட்டமான 'தி பெல்ட் அண்ட் ரோடு' அமைப்பை கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் ஜின்பிங் தொடங்கினார். இதன்மூலம் சாலை மற்றும் கடல்வழியாக மற்ற நாடுகளை தன்னுடன் இணைப்பதே சீனாவின் நோக்கம் ஆகும். சீனாவின் மையக்கொள்கையாக அமைந்த இந்த திட்டத்தில் இந்தோனேசியா, இலங்கை, பாகிஸ்தான், லாவோஸ் போன்ற 130-க்கும் அதிகமான நாடுகள் இணைந்தன. திட்டத்தின்படி உள்கட்டமைப்பு வசதிகளை சீனா ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அதற்கு பதிலாக நாட்டின் முக்கிய துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கொள்கிறது.
10 ஆண்டுகள் நிறைவு
இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு சீனாவில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தியனன்மென் சதுக்கத்தில் உள்ள அரசு மாநாட்டு அரங்கில் நடந்த விழாவை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்தார். பின்பு அவர் தனது உரையில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார். தனது உரையில் "பொருளாதார தடைகள், ராணுவ கட்டுப்பாடுகள், சுயாட்சி கொள்கை எதிராக ஒன்றுபடுவோம்" என்றார். மேலும் உறுப்பினர் நாடுகள் உடனான ஒப்பந்தத்தின்படி அன்னிய முதலீட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும். டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான சந்தை விரிவாக்கப்படும்" என உறுதியளித்தார்.
ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் கோடி
இதற்காக ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் கோடி (100 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும் என்றார். இதனையடுத்து ரஷிய அதிபர் புதின் பேசினார். அப்போது திட்டத்தின் வெற்றியை பாராட்டிய அவர் இதன்பலனாக உலகளாவிய முதலீடு அதிகரிப்பு, வளரும் நாடுகளின் தொழில்நுட்பம், கட்டமைப்புகள் மேம்பாடு ஆகியவற்றை சுட்டிக்கட்டினார். அவர் பேச தொடங்கியபோது புதினுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐரோப்பா நாட்டு பிரதிநிதிகள் பலர் மாநட்டில் இருந்து வெளியேறினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் உல்ஹக் கக்கர், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.