தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்
|தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
தைபே நகரம்,
தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் அங்கு போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு தைவான் அதிபர் லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தங்களது ஒருங்கிணைந்த பகுதி என சீன கூறி வருகிறது. மேலும் அதனை மீண்டும் தங்களுடன் இணைக்கவும் சீனா துடிக்கிறது. எனவே தைவானுடன் தூதரகம், வணிகம் என எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனை பொருட்படுத்தாத அமெரிக்கா தனது நாட்டின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பியது. இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இதனால் தைவான் எல்லையில் அவ்வப்போது போர்ப்பயிற்சி நடத்தி பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
அதேசமயம் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயார் என தைவானும் அறிவித்துள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் (மே) தைவானில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் சீன ஆதரவு பெற்ற ஹவ் யொ-ஹி மற்றும் ஆளுங்கட்சி சார்பில் லாய் சிங்-தே ஆகியோர் போட்டியிட்டனர். எனினும் ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற்று லாய்-சிங்-தே அதிபராக பதவியேற்றார்.
இதனையடுத்து தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது. அதன்படி கடந்த ஒரு நாளில் தைவான் எல்லையில் 7 போர்க்கப்பல்கள் மற்றும் 23 போர் விமானங்கள் கண்டறியப்பட்டன. அவை தைவான் எல்லையில் பல்வேறு போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டன.
அவற்றில் 19 விமானங்கள் இரு நாடுகளின் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் பறந்து சென்றதாக ராணுவ அமைச்சகம் கூறியது. சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு தைவான் அதிபர் லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.