ரஷியாவில் இருந்து சீனாவின் நிலக்கரி இறக்குமதி: ஐந்தாண்டுகளின் உச்சத்தை எட்டியது
|ரஷியாவில் இருந்து சீனாவின் நிலக்கரி இறக்குமதி 7.42 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
பெய்ஜிங்,
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது ராணுவ தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போர் காரணமாக இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த போர் தொடங்கிய பிறகு ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. முன்னதாக ஐரோப்பிய நாடுகளின் 70 சதவீத நிலக்கரித் தேவையை ரஷியாதான் பூர்த்தி செய்து வந்தது.
இந்த சூழலில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் அமலில் இருப்பதால், ரஷியா தனது நிலக்கரியை சீனா மற்றும் இந்தியாவுக்கு அதிக தள்ளுபடியில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷியாவில் இருந்து சீனாவின் நிலக்கரி இறக்குமதி ஜூலை மாதத்தில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது, ஏனெனில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ரஷியாவின் சரக்குகளை புறக்கணித்தபோதும் கூட சீனா தள்ளுபடி நிலக்கரியை வாங்கியது. இதன்படி கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிக அளவாக 74 லட்சத்து 20 ஆயிரம் டன் நிலக்கரியை ஒரே மாதத்தில் ரஷியாவிடம் இருந்து சீனா இறக்குமதி செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.