< Back
உலக செய்திகள்
சர்வதேச அளவில் தீவிர தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு சீனா மறைமுக ஆதரவு...?
உலக செய்திகள்

சர்வதேச அளவில் தீவிர தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு சீனா மறைமுக ஆதரவு...?

தினத்தந்தி
|
19 Oct 2022 9:11 AM GMT

ஐ.நா. சபையில், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் மகமூதுவை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா-அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா தடை போட்டுள்ளது.


நியூயார்க்,


மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் நடத்திய தாக்குதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் 10 பயங்கிரவாதிகளால் நடத்தப்பட்ட அந்த தாக்குதலால் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 166 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பி செல்ல முயன்ற பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை மட்டும் போலீசார் உயிருடன் பிடித்தனர். பின்னர் கசாப், கடந்த 2012-ம் ஆண்டு புனே ஏரவாடா ஜெயிலில் தூக்கிலிடப்பட்டார்.

இந்த மும்பை தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதி சஜித் மீர். லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் இந்தியாவுக்கான பொறுப்பு தலைவராக பதவி வகிப்பதுடன் இயக்கத்தின் முக்கிய தளபதியாகவும் செயல்படுபவர்.

சஜித் மீரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற முன்மொழிவு, ஐ.நா.வில் கடந்த செப்டம்பரில் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு தடுத்தது.

இதேபோன்று, லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் மற்றும் ஜமாத்-உத்-தவா இயக்கத்தின் தலைவரான அப்துல் ரகுமான் மக்கி, ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராவ் அசார் ஆகியோரையும் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க கோரிய முயற்சிகளை தடுத்து அவர்களை பாதுகாக்கும் வேலையில் சீனா இறங்கியது.

இப்போது, நான்காவது முறையாக மற்றொரு முட்டுக்கட்டையை சீனா போட்டுள்ளது. ஐ.நா. சபையில், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் மகமூதுவை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா தடை போட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-கொய்தா அமைப்புக்கான தடை கமிட்டியின் கீழ் மகமூத் பயங்கரவாதியை, கருப்பு பட்டியலில் வைப்பதற்கான முன்மொழிவை இந்தியா மற்றும் அமெரிக்கா இன்று கொண்டு வந்தது. ஆனால், அதற்கு எதிராக சீனா தடை போட்டு உள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரான ஷாகித் மகமூது, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பலா-இ-இன்சேனியத் நிறுவனத்தின் துணை தலைவராக செயல்பட்டு, மியான்மர், வங்காளதேசம், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து, இயக்கத்திற்காக நிதி திரட்டி வந்துள்ளார்.

2011-ம் ஆண்டு இறுதியில் இந்தியா மற்றும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதே லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய பணியாகும் என மகமூது கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சர்வதேச அளவில் அமைதி மற்றும் ஸ்திர தன்மை நிலவுவதற்கு எதிரான, தீவிர தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு, சீனா மறைமுக ஆதரவளிப்பதற்கு எடுத்துக்காட்டாக தடை நடவடிக்கை அமைந்து உள்ளது.

மேலும் செய்திகள்