சீனாவில் தொடரும் கொரோனா பாதிப்புகள்: நிரம்பி வழியும் தகனங்கள்
|சீனாவில் மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பீஜிங்,
சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் தினமும் 5 ஆயிரம் பேர் பலியானதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிஎன்என் அறிக்கையின்படி, பெய்ஜிங்கில் உள்ள ஒரு பெரிய தகனக்கூடம் முழுவதுமாக நிரம்பியிருந்தது, தகனம் செய்யும் பகுதிக்கு வெளியே நீண்ட வரிசையில் கார்கள் உள்ளே வருவதற்கு காத்திருக்கின்றன. உலைகளில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உடல் பைகள் குவிந்து கொண்டிருக்கின்றன என்றும் வரிசையில் காத்திருந்த துக்கமடைந்த குடும்பங்கள் இறந்தவரின் புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.