சீனாவில் அதிபர் ஜின்பிங்கை 3வது முறையாக தலைவராக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கூட்டம்: 2,300 நிர்வாகிகளுக்கு அழைப்பு!
|அதிபர் ஜி ஜின்பிங் 3வது முறையாக தலைவராக அங்கீகரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீஜிங்,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கிட்டத்தட்ட 2,300 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில், அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தலைவராக அங்கீகரிக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சீன அரசின் பொது பாதுகாப்பு முன்னாள் துணை அமைச்சர் சன் லிஜுன், அதிபர் ஜி ஜின்பிங்க்கு எதிரான "அரசியல் குழுவிற்கு" தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
சன் லிஜூனுக்கு வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது பதவி காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் புரிந்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல, இன்னும் 2 பேர் கடந்த வாரம் தண்டிக்கப்பட்டனர். அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தலைவராக உள்ள நிலையில், ஜின்பிங்க்கு எதிரானவர்களுக்கு அவசர அவசரமாக தண்டனை வழங்கப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012 இல் அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார், இதில் டஜன் கணக்கான உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன ராணுவம் மற்றும் அதிபர் பதவிக்கு தலைமை வகிக்கும் ஜி ஜின்பிங், தனது 10 ஆண்டு பதவிக்காலத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார்.
1976 இல் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங் இறந்ததிலிருந்து, சீன தேசத்தின் அனைத்து தலைவர்களும் 10 வருட பதவிக் காலத்தை கண்டிப்பாக பின்பற்றினர். இந்நிலையில் அதனை மாற்றி சரித்திரத்தில் இடம்பிடிக்க அதிபர் ஜி ஜின்பிங் முயற்சி எடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிபர் ஜி ஜின்பிங் அமைத்த வழிகாட்டுதல்களின் கீழ் 2296 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.