தைவானை சுற்றி வலம் வந்த சீனாவின் விமானம், கடற்படை கப்பல்கள்
|நடப்பு ஜனவரி வரையில், சீனாவின் 291 ராணுவ விமானங்கள் மற்றும் 132 கடற்படை கப்பல்களை தைவான் கண்டறிந்து உள்ளது.
தைப்பே,
தைவான் நாட்டை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தைவானை சுற்றி ராணுவ விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பி வருகிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை காலை 6 மணி முதல், செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையில், தைவானை சுற்றி 9 ராணுவ விமானம் மற்றும் 4 கடற்படையை சேர்ந்த கப்பல்கள் ஆகியவற்றை சீனா அனுப்பியிருக்கிறது.
இதனை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்து உள்ளது. இதேபோன்று, தைவானில் கீலங் பகுதியில் இருந்து வடமேற்கே 139 கி.மீ. தொலைவில் தைவான் ஜலசந்தியை சீன பலூன் ஒன்று மாலை 3.09 மணியளவில் கடந்து சென்றுள்ளது. எனினும், 3.10 மணியளவில் அது மறைந்து விட்டது என தைவான் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. இது தைவானை அதிர்ச்சி அடைய செய்தது.
சீனாவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவானும் விமானம் மற்றும் கடற்படையை சேர்ந்த கப்பல்களை அனுப்பியதுடன், சீன விமான செயல்பாட்டை கண்காணிக்க விமான பாதுகாப்பு சாதனங்களையும் அனுப்பியுள்ளது. அப்போது, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் எந்த விமானமும் அந்த பகுதியை கடந்து செல்லவில்லை.
நடப்பு ஜனவரி வரையில், சீனாவின் 291 ராணுவ விமானங்கள் மற்றும் 132 கடற்படை கப்பல்களை தைவான் கண்டறிந்து உள்ளது.