< Back
உலக செய்திகள்
திபெத்தில் மனித உரிமைகள் மீறல் - சீனாவுக்கு எதிராக அணிதிரள அமெரிக்கா அழைப்பு!
உலக செய்திகள்

திபெத்தில் மனித உரிமைகள் மீறல் - சீனாவுக்கு எதிராக அணிதிரள அமெரிக்கா அழைப்பு!

தினத்தந்தி
|
23 Jun 2022 10:29 AM IST

‘திபெத் மீதான உலக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8வது மாநாடு’ அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் நேற்று தொடங்கியது.

வாஷிங்டன்,

திபெத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மத அடக்குமுறைகள் குறித்து கவலை தெரிவிக்கும் வகையில் உலகத் தலைவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், 'திபெத் மீதான உலக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8வது மாநாடு' அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாடு திபெத் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வலுப்படுத்தவும், ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதில் 26 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், திபெத்திய நாடாளுமன்றம் உட்பட, நேரிலும், காணொலி முறையிலும் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி திபெத் விவகாரம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது:-

திபெத்தின் உண்மையான சுயாட்சியை முன்னெடுப்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்களை ஒன்றிணைக்கும் இந்த மன்றம் முக்கியமானது.

பல ஆண்டுகளாக, சீன அரசாங்கம் திபெத்தில் மனித உரிமைகள் மீது ஆபத்தான தாக்குதலை நடத்தி வருகிறது. திபெத்திய சுயாட்சி, அடையாளம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றில் சீனாவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரே குரலில் குரல் கொடுப்பதும், திபெத்திய மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய தார்மீக கடமையும் ஒட்டுமொத்த உலகிற்கு உள்ளது.

சீனாவுடனான வணிக உறவுகளின் காரணமாக, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நாம் பேசவில்லை என்றால், வேறு எங்கும், மனித உரிமைகளுக்கு எதிராக பேசுவதற்கான அனைத்து தார்மீக அதிகாரத்தையும் இழக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திபெத் மீதான சீன படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, திபெத்திற்கான தனி அடையாளத்தை மீட்டெடுப்பதில் இந்தியா ஆற்றிய அடித்தள பங்கை கௌரவிக்கும் வகையில், முதல் உலக பிரதிநிதிகளின் திபெத் மாநாடு புதுடெல்லியில் 1994ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில், திபெத் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, தலாய் லாமா மற்றும் சீனாவின் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவதற்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளில் பரிசீலிப்பார்கள் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்