உறுதியான வலிமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - தைவான் துணை அதிபரின் அமெரிக்க பயணத்திற்கு சீனா கண்டனம்
|தைவான் துணை அதிபர் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக சீனா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்,
சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தைவானின் துணை அதிபர் வில்லியம் லாய், பராகுவே நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாண்டியாகோ பெனாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு செல்வதற்கு முன்பாக அவர், இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
சமீபத்தில் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் ஒரு நடைமுறையான தைவான் சுதந்திரப் பணியாளர். தைவான் சீனாவின் பகுதியாக இல்லை. தைவானும் சீனாவும் ஒன்றுக்கொன்று அடிபணியவில்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தைவான் துணை அதிபரின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக சீனா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையிலான எந்தவொரு அதிகாரப்பூர்வ பரிமாற்றத்தையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது.
'தைவான் சுதந்திரம்' தேடும் பிரிவினைவாதிகள் எந்த பெயரிலும் எந்த காரணத்திற்காகவும் அமெரிக்காவிற்குள் நுழைவதை உறுதியுடன் எதிர்க்கிறது. மேலும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் தைவானுக்கும் இடையே எந்த வகையான அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் சீனா எதிர்க்கிறது.
தைவான் துணை அதிபர் வில்லியம் லாயின் அமெரிக்க பயணத்திற்கு சீனா தனது கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துகிறது. உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதற்கு உறுதியான வலிமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.