தைவானை நோக்கி 71 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பலை அனுப்பிய சீனா...!
|தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் இருநாடுகள் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
சொந்தம் கொண்டாடும் சீனா
சீனாவில் கடந்த 1927-ம் ஆண்டில் தொடங்கி 1949-ல் முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பின் பல தீவுகூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தனிநாடாக உருவெடுத்தது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு தைவானுடன் பிறநாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
ஆனால் சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்து ஆழப்படுத்தி வருகிறது. அதோடு சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் வழங்கி வருகிறது.
சீனா கடும் ஆத்திரம்
இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.அதை தொடர்ந்து, சீன ராணுவம் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து மிகப்பெரிய அளவில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் பயிற்சி தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது. இதனால் இருநாடுகள் இடையே போர்ப்பதற்றம் உருவானது.
போர் விமானங்களை அனுப்பியது
இந்த நிலையில் தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்ற நிலையில், சீனா அதை வன்மையாக கண்டித்தது. மேலும் தைவானை மிரட்டும் விதமாக கடந்த புதன்கிழமை தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியது. இதனால் இருநாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.
தைவானை சுற்றி வளைத்து
இந்த நிலையில் சீனா தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் கடுமையான போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக சீன ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவின் தலைவர் கூறினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "தைவானைச் சுற்றி கூட்டு போர் தயார்நிலை ரோந்து மற்றும் தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கா மற்றும் தைவானில் இருந்து அதிகரித்து வரும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் ஒரு உறுதியான பதில் இது. தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றார்.
71 போர் விமானங்கள்
சீனாவின் இந்த திடீர் போர்ப்பயிற்சியால் இருநாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் முன்தினம் காலை 6 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீனா தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், 7 போர்க்கப்பல்களையும் அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.