சீனாவில் மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பு உள்ளதாக அரசு தரப்பு விளக்கம்
|சீனாவில் தேவையான அளவிற்கு மருந்து பொருட்கள் கையிருப்பு உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார்.
பெய்ஜிங்,
சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் சீனாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. அதே சமயம் கொரோனா பாதிப்புகளை சீன அரசு முறையாக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.
அண்மையில் சீனாவில் அறிகுறில் இல்லாத கொரோனா பாதிப்புகளை பதிவு செய்யப்போவதில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்தது. இந்த நிலையில் இனி தினசரி கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களயும் வெளியிட மாட்டோம் என சீன சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் பதிவாகி வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் வெளியுறவுத்துறை செயலாளர் மாவ் நிங், இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் சீனாவில் தேவையான அளவிற்கு மருந்து பொருட்கள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார். அதே போல் மருந்துகளின் தேவைக்கேற்ப அவற்றை தயார் செய்வது வழங்குவதற்கான வசதிகளும் நிறைவாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.