அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு: தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை
|அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
பீஜிங்,
சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்றதால் சீனா கடும் கோபமடைந்தது. அதை தொடர்ந்து தைவானை எச்சரிக்கும் விதமாக சீன ராணுவம் தைவானை சுற்றிவளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது.
இதனால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் அமெரிக்க எம்.பி.க்கள் 5 பேர் 2 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவானுக்கு சென்றனர். இது சீனாவை மேலும் ஆத்திரமடைய செய்தது. இதன்காரணமாக சீன ராணுவம் மீண்டும் தைவானை சுற்றிலும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க எம்.பி.க்களின் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானின் மூத்த அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
தைவானின் சுதந்திரத்தை தீவிரமாக ஆதரித்து வரும் அமெரிக்காவுக்கான தைவான் பிரதிநிதி ஹசியாவ் பி கிம், தைவான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் வெலிங்டன் கூ, தைவான் துணை சபாநாயகர் சாய் சி சாங் உள்பட 7 பேர் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.
முன்னதாக நான்சி பெலோசியின் வருகையை தொடர்ந்து தைவானின் வணிக நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.