< Back
உலக செய்திகள்
சீனாவில் ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

சீனாவில் ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் பலி

தினத்தந்தி
|
14 Jan 2023 6:55 PM GMT

சீனாவில் ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பீஜிங்,

சீனாவில் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிப்பதை இலக்காக கொண்டு 'பூஜ்ய கொரோனா கொள்கை' என்கிற கொள்கையை அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு தீவிரமாக கடைப்பிடித்து வந்தது. இந்த கொள்கையின் கீழ் சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த கட்டுப்பாடுகளால் கடும் விரக்திக்கு ஆளான சீன மக்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். ஒருபுறம் மக்களின் கடும் கோபம், மறுபுறம் பொருளாதார வீழ்ச்சியால் சீன அரசு திணறியது. இதனால் 3 ஆண்டுகளாக அமலில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் அரசு விலக்கியது. 'பூஜ்ய கொரோனா கொள்கை' முழுவதுமாக கைவிடப்பட்டது.

இதன் எதிரொலியால் சீனாவில் கொரோனா பரவல் ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியது. தினந்தோறும் லட்சக்கணக்கில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் தகவல்கள் வெளியாகின. இது உலகை அதிரவைத்தது.

இந்த சூழலில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து, கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தியது. கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான தகவல்களை வெளியிடும்படி உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் சீனா அதற்கு செவிசாய்க்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் சீனாவில் சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியானதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக 5,503 இறப்புகள் மற்றும் கொரோனாவுடன் தொடர்புடைய மற்ற நோய்களால் 54,435 இறப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்