சீன வெளியுறவுத்துறை மந்திரி மாயம்....! - புதிய மந்திரியை நியமித்த அரசு
|சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த மாதம் 25ம் தேதி பொதுவெளியில் தோன்றினார். அதன் பின்னர், அவர் எங்கு உள்ளார் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
பிஜீங்,
2022-ம் ஆண்டு முதல் சீன வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர் குயின் கேங். 57 வயதான இவர் கடந்த மாதம் ஜூன் 25ம் தேதி ரஷியா, வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக சீன செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகின. இந்த சந்திப்பிற்கு பின் சீன வெளியுறவுத்துறை மந்திரி குயின் கேங் பொதுவெளியில் தோன்றவில்லை. அதன் பின்னர் ஜூலை 4-ம் தேதி ஜூலை வெளியுறவுத்துறை மந்திரிக்கும், ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக்கொள்கை தலைவருக்கும் இடையேயான சந்திப்பை சீனா ரத்து செய்தது.
தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கி தலைவர், அமெரிக்க பருவநிலை மாற்றத்துறை அதிகாரி ஜான் கெரி ஆகியோர் சீன வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு தொடர்பான மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்றது. இந்த கூடத்திலும் சீன வெளியுறவுத்துறை மந்திரி குயின் கேங் பங்கேற்கவில்லை. உடல்நலம் தொடர்பான காரணங்களால் மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை என சீனா தெரிவித்தது.
ஆனால், ஒரு மாதமாக சீன வெளியுறவுத்துறை மந்திரி குயின் கேங் பொதுவெளியில் தோன்றாத நிலையில் அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த சூழ்நிலையில் குயின் கேங் வெளியுறவுத்துறை மந்திரி பதவியில் இருந்து சீனா நீக்கியுள்ளது. மேலும், நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங் யு செயல்படுவார் என சீனா தெரிவித்துள்ளது. அதேவேளை குயின் கேங் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து சீன அரசு தெரிவிக்கவில்லை.