< Back
உலக செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா
உலக செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா

தினத்தந்தி
|
1 April 2024 2:42 PM IST

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர்களை மாற்றி 4வது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது.

பீஜிங்,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது.

சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்டது.

2017ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023ல் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் வெளியிட்டது.

தற்போது நான்காவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.

சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சல பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி ஆகியவை அடங்கும். இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் மாற்றியுள்ளது சீன அரசு. இதனை தனது அரசு நாளிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கையை பலமுறை கண்டித்துள்ள இந்தியா, அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது. கடந்த மார்ச் 23ம் தேதி அன்று சீனா தொடர்பாக பேசிய மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், "சீனாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நகைப்புக்குரியது. அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் இயற்கையான பகுதி" என்று கூறினார்.

மேலும் செய்திகள்