< Back
உலக செய்திகள்
தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் - சீனாவின் மிரட்டலால் பதற்றம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் - சீனாவின் மிரட்டலால் பதற்றம்

தினத்தந்தி
|
11 Aug 2022 4:10 AM IST

தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் என சீனா மிரட்டல் விடுத்துள்ளதால் இருநாடுகள் இடையே மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

பீஜிங்,

சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் முடிவில் தைவான் தீவு, தனி நாடாக உருவானது. ஆனால் அதை ஒப்புக்கொள்ளாத சீனா, அந்த தீவு இன்னமும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி வருகிறது. அதோடு தைவான் தீவை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடியாய் துடித்து வருகிறது. இதனால் தைவான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை தொடங்கியது. 4-ந்தேதி தொடங்கிய இந்த போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் சீனா ராணுவம் அறிவித்திருந்தது.

படையெடுக்க தயாராகிறது

ஆனால் அதன் பின்னரும் சீன ராணுவம் தைவானை சுற்றிலும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் 7-வது நாளாக நேற்றும் சீன ராணுவம் தைவானை சுற்றிய கடல் மற்றும் வான்பரப்பில் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த நிலையில் போர்ப்பயிற்சி மூலம் தங்கள் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக குற்றம் சாட்டிய தைவான் சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நேற்று முன்தினம் போர்ப்பயிற்சியை தொடங்கியது. எனினும் இது சீனாவுக்கான பதிலடி இல்லை என்றும், வழக்கமாக நடைபெறும் போர்ப்பயிற்சி என்றும் தைவான் ராணுவம் விளக்கம் அளித்தது. இந்த பரஸ்பர போர்ப்பயிற்சியில் இரு நாடுகள் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

சீனா மிரட்டல்

இந்த நிலையில் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் என சீனா மிரட்டல் விடுத்திருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தைவானுடன் அமைதியான மறு ஒருங்கிணைப்பை அடைய சீனா மிகவும் நேர்மையுடன் செயல்படும். அமைதியான வழியில் இதை சாத்தியமாக்க அதிகபட்ச முயற்சிகளை சீனா மேற்கொள்ளும்.

ஆனால் நாங்கள் படை பலத்தை பயன்படுத்தும் முடிவை கைவிட்டு விட மாட்டோம். சாத்தியமான அனைத்து வழிகளையும் தேர்வு செய்வதற்கான விருப்பத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். இது வெளிநாடுகளின் தலையீடுகள் மற்றும் அனைத்து பிரிவினைவாத நடவடிக்கைகளிலிருந்தும் பாதுகாக்கும்.

இறுதி இலக்கு

வெளிநாடுகளின் குறுக்கீடு அல்லது பிரிவினைவாத குழுக்களின் தீவிர நடவடிக்கைக்கு படை பலத்தை பயன்படுத்தி பதிலளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம்.

சீனாவின் அமைதியான மறு ஒருங்கிணைப்பின் வாய்ப்புகளை உறுதிசெய்து, இந்த செயல்முறையை முன்னெடுப்பதே எங்களின் இறுதி இலக்கு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்