< Back
உலக செய்திகள்
தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது - தைவான் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

"தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது" - தைவான் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
6 Aug 2022 10:26 PM IST

தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.

தைபே,

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது. அதே வேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதே போன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த 1-ந்தேதி தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி தைவானுக்கு சென்றால் எங்களது உள் விவகாரங்களிலும் தலையிடுவது போன்றது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்தது. இருப்பினும், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, நான்சி பெலோசி விமானம் மூலம் தைவானுக்குச் சென்றார்.

நான்சி பெலோசியின் வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது தைவான் எல்லை அருகே சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தைவானின் எல்லைப்பகுதி அருகே சீன ராணுவம் அதிநவீன ஏவுகணைகளை வீசி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தைவான் நாட்டின் முக்கிய தீவு ஒன்றின் மீது தாக்குதல் நடத்த சீனா தயாராகி விட்டதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் பல்வேறு போர்க்கப்பல்களும், ராணுவ விமானங்களும் தங்கள் எல்லைக்குள் நுழைந்திருப்பதாக தைவான் அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்