சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையால் பாகிஸ்தானில் பெருவெள்ள பாதிப்பு... நிபுணர்கள் கூறுவது என்ன?
|பாகிஸ்தானில் 1,500 பேர் உயிரிழப்பை ஏற்படுத்திய பெருவெள்ளத்திற்கு சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையே காரணம் என அந்நாட்டு நிபுணர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
லாகூர்,
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமே 'சீபெக்' என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமையும் இந்த வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலைகள், ரெயில் தடங்கள், குழாய் மூலம் எண்ணெய் வினியோகம் போன்றவை ஏற்படுத்திட சீனா முயன்று வருகிறது. சீனா - மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தவும், தொடர்பு ஏற்படுத்தவும் முயற்சித்து வருகிறது.
எனினும், இத்திட்டத்திற்கு பலூசிஸ்தான், கைபர் பகுதியில் இருப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டம் தங்களுக்கு எந்தவித பயனும் அளிக்கவில்லை என்றும் அதே வேளையில் பாகிஸ்தானின் பிற பகுதிகள் மற்றும் சீனாவுக்கு அதிக பலன்கள் கிடைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து, கடந்த ஜூனில் இருந்து பெய்து வந்த கனமழையால் நகரெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்புகள் தொடர்ந்ததுடன், அதில் இருந்து மக்கள் மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது.
கனமழையால் கடந்த ஜூனில் இருந்து 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடுமையான மழைப்பொழிவு, வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியது. அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆனாலும், வெள்ள பாதிப்பு போக அதன் தொடர்ச்சியாக பல்வேறு நோய்களும் மக்களை பாடாய்படுத்தி வருகின்றன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளும், தோல் பாதிப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன.
பாகிஸ்தானில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. பருவகால மாற்றமுல் அதில் ஒன்று என கூறப்பட்டு உள்ளது. ஆனால், பாகிஸ்தானில் குழந்தைகள் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய பெருவெள்ளத்திற்கு சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையே காரணம் என அந்நாட்டு நிபுணர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இதுபற்றி, அல்-அரேபியா வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் அழிவு ஏற்படுத்திய வெள்ளத்திற்கு மனித நடவடிக்கைகளே பொறுப்பு என 2022-ம் ஆண்டு செப்டம்பரில் ஆய்வு நடத்திய உலக வானிலை அமைப்பை சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினரின் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது என தெரிவித்து உள்ளது.
தி டான் பத்திரிகையில் வெளியான செய்தியில், பாகிஸ்தான் வெள்ளத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என ஆரிப் ஹாசன் என்ற கட்டிட வல்லுனர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் எழுதியுள்ள தகவலில், முதலில் பல்வேறு சாலைகளின் உயரமும், அது கடந்து செல்ல கூடிய பகுதிகளை விட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏரிகளில் இருந்து நீர் வெளியேறுவதற்கான வழிகள் இன்றி காணப்படுகின்றன என தெரிவித்து உள்ளார்.
இதுபோக, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை கட்டமைப்பு திட்டம் ஆனது, பாகிஸ்தானில் அதிகம் பாதிக்கப்பட கூடிய பகுதியின் வழியே செல்கிறது. இதனால், பாகிஸ்தானில் பனி உருகுதல், வெள்ளம், நிலச்சரிவு, அதிக அளவில் காடுகள் அழிவது மற்றும் ஆறுகள் முடக்கம் ஆகிய விளைவுகள் ஏற்பட்டு உள்ளன என்று அல்-அரேபியா தெரிவித்து உள்ளது.