நிலவின் இருண்ட பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியது சீனா.. மாதிரிகளை சேகரித்து கொண்டு வர திட்டம்
|சீனா இதற்கு முன்பு வெற்றிகரமாக நிலவுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. அதில் ரோவர் தரையிறக்கமும் அடங்கும்.
பீஜிங்:
நிலவின் இருண்ட பகுதிக்கு அதாவது நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம், முதல் முறையாக நிலவின் தென் துருவத்திற்கு சாங்'இ-6 என்ற விண்கலத்தை இன்று அனுப்பி உள்ளது.
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்வாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-5 ஒய்8 என்ற ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலமானது ஒரு ஆர்பிட்டர், ஒரு லேண்டர், நிலவில் இருந்து புறப்படுவதற்கான ஒரு அசெண்டர் மற்றும் பூமிக்கு திரும்பும் மறு நுழைவு கலன் என 4 பகுதிகளைக் கொண்டது.
விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 48 மணி நேரத்திற்குள், அதில் உள்ள ரோபோ கை மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள சிறிய பாறை துகள்கள், துசிகள், தரையில் 2 மீட்டர் வரை துளையிட்டு அதிலிருந்து மண் மாதிரிகள் என 2 கிலோ எடையுள்ள பொருட்கள் சேகரிக்கப்படும். பின்னர் அந்த சாம்பிள்கள் அசெண்டர் மூலம் சந்திரனின் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்பட்டு, மறுநுழைவு கலனுக்கு மாற்றப்படும். அந்த கலன் பூமிக்கு திரும்பும்.
சந்திரனின் தென் துருவத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் இந்த திட்டம், நிலவு ஆய்வு வரலாற்றில் முதல் முயற்சி என்று சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீனா இதற்கு முன்பு வெற்றிகரமாக நிலவுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. அதில் ரோவர் தரையிறக்கமும் அடங்கும். செவ்வாய் கிரகத்துக்கும் ரோவர் அனுப்பியுள்ளது. 2030-க்குள் மனிதர்களை சந்திரனில் தரையிறக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.