< Back
உலக செய்திகள்
ரஷியா, ஈரானுடன் கைகோர்க்கிறது சீனா; அடுத்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டம்
உலக செய்திகள்

ரஷியா, ஈரானுடன் கைகோர்க்கிறது சீனா; அடுத்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டம்

தினத்தந்தி
|
15 March 2023 1:29 PM GMT

அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ரஷியா, ஈரான் மற்றும் சீனா இணைந்து அடுத்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது.



பீஜிங்,


சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ஓமன் வளைகுடா பகுதியில் இந்த வாரம், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ரஷியா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த வாரம் கூட்டு கடல் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த பாதுகாப்பு பிணைப்பு-2023 கடற்பயிற்சியில் பிற நாடுகளும் பங்கேற்க உள்ளன என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. பெர்சியன் வளைகுடாவின் முகப்பு பகுதியில் உள்ள கடல் பகுதிகளில் ஈரான், பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அனைத்து நாடுகளும் கடற்கரைகளை கொண்டு உள்ளன.

இந்நிலையில், இந்த கடற்பயிற்சியானது, பங்கெடுக்கும் நாடுகளின் கடற்படையினரிடையே நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்த உதவும். அதனுடன் மண்டல அமைதி மற்றும் ஸ்திர தன்மைக்கு ஏற்ற நேர்மறையான ஆற்றலையும் ஊட்டும் என சீன பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த 3 நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரால் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவியும் செய்து வருகின்றன.

ரஷியாவுக்கு எதிரான விமர்சனங்களை வெளிப்படுத்த சீனா மறுத்து வருகிறது. இந்த விவகாரங்கள் உள்பட சீனாவுக்கு எதிராக பல்வேறு விசயங்களில், அமெரிக்கா எதிரான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. ரஷியாவுக்கு உதவ கூடாது என சீனாவுக்கு எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

இதேபோன்று, ஈரான் நாடு உருவானது முதல் அமெரிக்காவுக்கு எதிரான போக்கை கொண்டு உள்ளன. அமெரிக்க தூதர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்த சம்பவங்களும் நடந்து உள்ளன.

இந்நிலையில், இந்த கூட்டு கடற்பயிற்சி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டும், 2019-ம் ஆண்டிலும் இதேபோன்றதொரு பயிற்சியை 3 நாடுகளும் மேற்கொண்டன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் எதிர்க்கப்படுகிற நாடுகளுடன் ராணுவ மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகளை சீனா மேற்கொண்டு வருவது அதிகரித்து உள்ளது தெரிகிறது.

மேலும் செய்திகள்