வயசு பசங்களுக்கு வலை வீசும் சீனா... கவர்ச்சி அறிவிப்புக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..!
|ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய சீனா, இன்று அதே மக்கள் தொகையை அதிகரிக்க படாதபாடு பட்டு வருகிறது.
பெய்ஜிங்,
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தம்பதியர் ஒருவர் ஒரு குழந்தை மட்டுமே என்று அனுமதித்து வந்த சீனா, தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ளுங்கள் என தனது நாட்டு மக்களிடம் கெஞ்சி வருகிறது. இதற்காக பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிச்சுவான் மாகாண அரசு, சீன இளைஞர்கள் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூட அறிவித்திருந்தது. ஆனால், இப்படி பல முயற்சிகளை கையில் எடுத்தும் மக்கள் தொகையை அதிகரிக்க முடியாமல் திணறி வருகிறது.
சீனாவை பொறுத்தவரை 61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு புதிதாக பிறந்தவர்களை விட உயிரிழந்தவர்களே அதிகம். குறிப்பாக இளைஞர்கள் பலரும் திருமணத்தை தள்ளிப் போடுவதாலும், கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதாலும் குழந்தையின்மை அதிகரித்து வருகிறது.
இதனால் தற்போது விந்தணு தானம் செய்ய முன்வருமாறு கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. சீன மாகாணங்கள். குழந்தை இல்லாத தம்பதிகளின் குழந்தை கனவை நிறைவேற்றி வைப்பது தான் விந்தணு தானம். அதுவும் சீன இளைஞர்களிடையே கடந்த 15 ஆண்டுகளில் விந்து தரம் குறைந்துவிட்ட நிலையில், விந்தணு தானம் செய்வதற்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாவும் தயாராக இருப்பவர்களை வலை வீசி தேடி வருகின்றன விந்தணு வங்கிகள்.
அதுவும் ஆரோக்கியமான எவ்வித மரபணு நோய் பாதிப்புகளும் இல்லாத 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு விந்தணு தானம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஷான்சி, யுனான், ஷான்டாங், ஜியான்சி, ஹைனான், உள்ளிட்ட பல்வேறு மாகணங்களில் உள்ள விந்தணு வங்கிகள் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தானமாக பெறப்படும் விந்தணுக்களை சேமித்து வைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளன.
இப்படி விந்தணு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு 60 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய சீனா... இன்று அதே மக்கள் தொகையை அதிகரிக்க படாதபாடு பட்டு வருகிறது.