< Back
உலக செய்திகள்
சீனாவில் ஒரு வார கால விடுமுறையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்!
உலக செய்திகள்

சீனாவில் ஒரு வார கால விடுமுறையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்!

தினத்தந்தி
|
10 Oct 2022 3:20 PM IST

கடந்த ஒரு வார கால விடுமுறையின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

பீஜிங்,

கொரோனா தொற்று பரவாமல் இருக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உலகின் சில இடங்களில் சீனாவும் ஒன்றாகும்.

சீனாவில் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை, ஒரு வார காலம் நீடிக்கும். அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

இந்த நிலையில், சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சட்டென அதிகரித்திருப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார கால விடுமுறையின் போது தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சாங்சி மாகாணத்தின் பென்யாங் நகரத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஹோஹோட் நகரத்தில் கடந்த 12 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. அங்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஷாங்காய் மாகாணத்தின் சில மாவட்டங்கள் இன்று முதல் திரையரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்களை மூடுவதாக அறிவித்தன.

பீஜிங் மற்றும் பிற நகரங்களில் பூங்காக்கள், அலுவலக கட்டிடங்கள், கடைகள் மற்றும் பிற பொது இடங்களுக்குள் பொதுமக்கள் நுழைய, 72 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை இன்னும் அமலில் உள்ளது. கொரோனா இல்லை என்றால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின், இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்