< Back
உலக செய்திகள்
தைவானை அச்சுறுத்தும் சீனா
உலக செய்திகள்

தைவானை அச்சுறுத்தும் சீனா

தினத்தந்தி
|
18 Sept 2023 9:59 PM IST

தைவான் எல்லைக்குள் 100-க்கும் மேற்பட்ட சீன விமானங்கள் பறந்ததால் போர்ப்பதற்றம் அதிகரித்தது.

சீனா எச்சரிக்கை

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தனி நாடாக பிரிந்தது. எனினும் அதனை தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கருதுகிறது. எனவே தைவானுடன் தூதரக உறவுகள் வைக்கக்கூடாது என்று மற்ற நாடுகளையும் சீனா எச்சரித்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை புரிந்தார். அதேபோல் தைவான் துணை அதிபர் சாய் இங் வென் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார்.

தகுந்த பதிலடி

தைவானின் இந்த அரசியல் நடவடிக்கைகளால் சீனா மிகவும் அதிருப்தி அடைந்தது. இதனால் சமீப காலமாக தைவான் எல்லையில் சீனா அடிக்கடி போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தைவான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது. எனினும் சீனாவின் அச்சுறுத்தல் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக தைவானை நோக்கி அனுப்பும் போர் விமானங்களின் எண்ணிக்கையை சீனா தற்போது அதிகரித்துள்ளது.

போர்ப்பதற்றம் அதிகரிப்பு

இந்தநிலையில் இன்று ஒரே நாளில் சீனாவுக்கு சொந்தமான 103 போர் விமானங்கள் தைவான் எல்லையில் பறந்தன. அதில் 40 விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை தாண்டியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதேபோல் 9 போர் கப்பல்களும் தைவானின் கடற்பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அங்கு போர்ப்பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்