சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 127 ஆக உயர்வு: 700 பேர் படுகாயம்
|நில நடுக்கத்தால் பல இடங்களில் சாலைகள் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பீஜிங்,
வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காய் ஆகிய மாகாணங்களில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் வீட்டுக்குள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். எனவே உடனடியாக வெளியேற முடியாததால் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து சுமார் 10 முறை பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிர்வினை உணர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் அங்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். எனினும் இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
நில நடுக்கத்தால் பல இடங்களில் சாலைகள் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.