பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனை நடத்திய சீனா
|பசிபிக் பெருங்கடலில் சீன ராணுவம் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
பீஜிங்,
சீன ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும்(ICBM) ஏவுகணையை இன்று சோதனை செய்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுத செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறனை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சீன ராணுவம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணிக்கப்பட்ட கடல் பகுதியில் ஏவுகணை சரியாக விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனை சீன ராணுவத்தின் வருடாந்திர பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது என்றும், எந்த நாட்டிற்கும் அல்லது இலக்கிற்கும் எதிராக சோதனை நடத்தப்படவில்லை என்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்பை அடையக்கூடியது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை சீனா கடைபிடிக்கிறது. சமீப காலமாக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ஏவுகணை சோதனைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவின் ஏவுகணை சோதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு கடல் பகுதியை நோக்கி வட கொரியா பல குறுகிய தூர ஏவுகணை சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.