தைவானுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஏவுகணை இடைமறிப்பு சோதனையை நடத்திய சீனா
|தைவானுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஏவுகணை இடைமறிப்பு சோதனையை சீனா நடத்தியுள்ளது.
பீஜிங்,
தைவானுடனான பதற்றத்துக்கு மத்தியில் சீனா ஏவுகணை இடைமறிப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
சீனாவில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதேபோல் தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
சீனாவின் இத்தகைய பிராந்திய உரிமைகோரல்களை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா நேரடியாக எதிர்த்து வருகிறது.
அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வரும் சூழலில் தைவான் தன்னை தற்காத்துக்கொள்ள அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது.
இந்த சூழலில் தைவானை, சீனா ஆக்கிரமிக்க நினைத்தால் அமெரிக்கா ராணுவம் அதில் தலையிட்டு தைவானை பாதுகாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவானை சீனாவிடமிருந்து பிரிக்க எந்த நாடாவது நினைத்தால், அதனை எதிா்த்து போா் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என்று அமெரிக்காவை நேரடியாக எச்சரித்து.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே இப்படி மோதல் வலுத்தும் வரும் நிலையில் சீனா நேற்று ஏவுகணை இடைமறிப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
பிராந்திய உரிமைகோரல்களுக்கு எதிரான வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நடுத்தர ஏவுகணை இடைமறிப்பு சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது முற்றிலும் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்றும், மாறாக எந்த வெளிநாட்டு நாடுகளையும் குறிவைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தைவான் மீதான சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் வேளையில் சீனா இத்தகைய சோதனையை நடத்தியிருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.