சீன தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிப்பு; மீனவர்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதி
|சீனாவின் தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், மீனவர்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்து உள்ளார்.
டோக்கியோ,
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுநீரானது பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அண்டை நாடுகளான சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே ஜப்பானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து சீனா உத்தரவிட்டது. இதனால் கடல்வகை உணவுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது 90 சதவீதம் குறைந்தது. இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா டொயோசுவில் உள்ள மீன்சந்தைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சீனாவின் இந்த தடையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவுவதாக அவர் உறுதியளித்தார்.
இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜப்பானின் கடல் வகை உணவுகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை கடல் உணவு வகைகளை உள்நாட்டில் மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என புமியோ கிஷிடா வலியுறுத்தினார்.