தைவானை சுற்றி சீனா மீண்டும் போர்ப்பயிற்சி
|அமெரிக்க எம்.பி.க்கள் வருகையால் கோபமடைந்துள்ள சீனா, தைவானை சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது.
தைபே,
சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் சீனா கடும் எதிர்ப்பை புறம் தள்ளிவிட்டு அமெரிக்க சபாநாயகர் நான்சிபெலோசி கடந்த 2-ந்தேதி தைவான் சென்றார். இதில் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதானல் தைவான் சீனா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் கடந்த 11-ந்தேதி சீனா பயிற்சியை நிறைவு செய்தது.
இந்த நிலையில் இந்த பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேரை கொண்ட பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் தைவான் சென்றது. இந்த குழு நேற்று தைவான் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் சீன ராணுவம் தைவானை சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.
இதுபற்றி சீன ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தைவான் தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் தயார்நிலை ரோந்து மற்றும் போர் பயிற்சிகள் திங்கட்கிழமை தொடங்கியுள்ளன. இது, தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் அமெரிக்கா மற்றும் தைவானுக்கு எதிரான ஒரு கடுமையான தடுப்பு நடவடிக்கையாகும்" என கூறப்பட்டுள்ளது.