தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி - பதற்றம் அதிகரிப்பு
|தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
பீஜிங்,
சீனாவில் கடந்த 1927-ம் ஆண்டில் தொடங்கி 1949-ல் முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பின் பல தீவுகூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தனிநாடாக உருவெடுத்தது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.
எனவே தைவானை தன்வசமாக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து வரும் சீனா, இதற்காக படைபலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என மிரட்டி வருகிறது. இப்படியான சூழலில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் தைவானுடன் அமெரிக்க நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
இந்த நிலையில் தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற தைவான் அதிபர் சாய் இங் வென், நாடு திரும்பும் வழியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்றார். முன்னதாக இந்த பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்த சந்திப்பு நடைபெற கூடாது இருதரப்பையும் கடுமையாக எச்சரித்தது.
ஆனால் சீனாவின் எச்சரிக்கையும் மீறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்து பேசினார்.
இதனால் கடும் கோபமடைந்த சீனா, தைவானை சுற்றிவளைத்து போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தைவானைச் சுற்றி கூட்டு போர் தயார்நிலை ரோந்து மற்றும் தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கா மற்றும் தைவானில் இருந்து அதிகரித்து வரும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் ஒரு உறுதியான பதில் இது. தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த திடீர் போர்ப்பயிற்சியால் இருநாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனிடையே தைவான் அதிபர் மற்றும் அமெரிக்க சபாநாயகரின் சந்திப்பை ஏற்பாடு செய்த கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி நூலகம் மற்றும் தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் பிராஸ்பெக்ட் அறக்கட்டளை மற்றும் ஆசிய தாராளவாதிகள் மற்றும் ஜனநாயக கவுன்சில் ஆகிய அமெரிக்க அமைப்புகள் மீது சீனா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.