< Back
உலக செய்திகள்
ஜப்பானியர்களுக்கும் விசா வழங்குவதை நிறுத்தியது சீனா

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஜப்பானியர்களுக்கும் விசா வழங்குவதை நிறுத்தியது சீனா

தினத்தந்தி
|
12 Jan 2023 4:02 AM IST

தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தியது.

பீஜிங்,

சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு கடந்த மாதம் நீக்கியது. இதன் காரணமாக அங்கு கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது.

சீனாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகுவதாகவும், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.

இதனை பாரபட்சமான நடவடிக்கை என சீனா குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழலில் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்ததற்கு பதிலடியாக தென்கொரிய மக்களுக்கு சுற்றுலா மற்றும் வணிக விசா வழங்குவதை நிறுத்துவதாக சீனா நேற்றுமுன்தினம் அறிவித்தது. சீன பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என சீனா கூறியது.

இந்த நிலையில் தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பான் மக்களுக்கு சீனா விசா தடை விதித்துள்ளது. இது ஜப்பானில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று முதல், ஜப்பானில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் சீனாவுக்குச் செல்லும் ஜப்பானிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துகின்றன" என கூறப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள மேலும் பல நாடுகளுக்கு சீனா இந்த தடையை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்