< Back
உலக செய்திகள்
15-வது மாடியில் இருந்து வீசி குழந்தைகள் படுகொலை; சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
உலக செய்திகள்

15-வது மாடியில் இருந்து வீசி குழந்தைகள் படுகொலை; சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தினத்தந்தி
|
2 Feb 2024 2:53 AM IST

இந்த தண்டனை பற்றிய செய்தி சீனாவின் வெய்போ வலைதளத்தில் டிரெண்டிங் ஆனதுடன், 20 கோடி பேரின் பார்வைகளை பெற்றுள்ளது.

பீஜிங்,

சீனாவை சேர்ந்தவர் ஜாங் போ. இவரது முதல் மனைவி சென் மெய்லின். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு வயதில் ஒரு மகன் இருந்தனர்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி விவாகரத்து செய்தது. குழந்தைகள் இருவரும் தந்தையிடம் இருந்தனர். இந்த சூழலில், யே செங்சென் என்ற வேறொரு பெண்ணுடன் ஜாங் போவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆனால், ஜாங்குக்கு முன்பே திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருப்பது செங்சென்னுக்கு பின்னரே தெரிய வந்துள்ளது.

இது தங்களுடைய உறவுக்கு ஒரு தடையாக இருக்கும் என செங்சென் நினைத்திருக்கிறார். அதனால், அவர்கள் இருவரையும் தங்கள் வாழ்வில் இருந்து விலகி இருக்கும்படி சென் விரும்பியுள்ளார். ஒரு புது வாழ்வை தொடங்க அந்த பச்சிளம் குழந்தைகளை கொல்ல வேண்டும் என ஜாங்கை சென் கட்டாயப்படுத்தி உள்ளார்.

இதன்பின்னர், அவர்கள் வசித்த குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியே குழந்தைகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜாங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகள் விழும்போது, தூங்கி கொண்டிருந்தேன் என ஜாங் கூறியுள்ளார். கீழே பொதுமக்கள் அலறிய சத்தம் கேட்டு எழுந்தேன் என்றும் கூறியுள்ளார்.

குழந்தைகள் இறந்த தகவல் அறிந்ததும் முதல் மனைவி மெய்லின் அதிர்ச்சியடைந்து உள்ளார். அவர்கள் பயந்து போனார்களா? என தெரியவில்லை. 15-வது தளத்தில் இருந்து தரைதளம் வரையில் குழந்தைகள் என்ன உணர்ந்தனர் என என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஜாங் மற்றும் செங்சென்னுக்கு சுப்ரீம் கோர்ட்டு, மரண தண்டனை வழங்கியது. 2 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த புதன்கிழமை அவர்களுக்கு ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களது இந்த தண்டனை பற்றிய செய்தி சீனாவின் வெய்போ வலைதளத்தில் டிரெண்டிங் ஆனதுடன், 20 கோடி பேரின் பார்வைகளை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்