தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு கார் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் பேச்சு
|தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
நியூயார்க்,
உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதேபோன்று, பேபால் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, மைக்ரோசிப் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுபோன்று, தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதன்பின் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதுபற்றிய புகைப்படங்களையும் அவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார்.
இதன்பின், அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்யும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டது. தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதுபோன்று பல்வேறு திட்டங்களுக்கான நடைமுறைகளும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனை தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடந்தது.
30 ஆண்டுகளாக தமிழகத்துடன் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது என பதிவிட்டு உள்ளார். சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த உற்பத்தியை கடந்த 2022-ம் ஆண்டுடன் அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.