பொலிவியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதம் - எதிர்ப்பு தெரிவித்து 3 வாரங்களாக தொடரும் போராட்டம்
|மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டே நடத்தக்கோரி பொலிவியாவில் கடந்த 3 வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லா பாஸ்,
தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் வரும் 2024-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி லூயிஸ் அக்ரே அறிவித்துள்ளார். ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டே நடத்த வேண்டும் எனவும், அரசியல் காரணங்களுக்காக இப்பணியை ஆளும் அரசு புறந்தள்ளி வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொலிவியா நாட்டில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த 3 வார கால போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பொலிவியாவின் மிகப்பெரிய நகரமான சாண்டா குரூஸ் நகரில், 3-வது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.