லிஸ் டிரஸ்சின் ராஜினாமாவை தொடர்ந்து வைரலான பூனையின் டுவிட்டர் பதிவு
|இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
லண்டன்,
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவை மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல விவகாரங்களை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் லிஸ் டிரஸ் பதவியேற்றார்.
அவர், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதனை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து உள்ள நிலையில், இந்த திட்டம் பற்றி பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தது.
இது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். இப்படி அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
டிரஸ் தனது பதவி விலகல் பற்றி அறிவித்ததும், லேர்ரி பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அமைச்சரவை அலுவலகத்திற்கு என அதிகாரப்பூர்வ பூனை உள்ளது. அதனை சீப் மவுசர் என அழைக்கின்றனர். இங்கிலாந்து பிரதமராக வருபவர் சீப் மவுசராக பூனையை நியமிக்கும் அதிகாரம் பெறுகிறார்.
இந்த சீப் மவுசராக உள்ள லேர்ரி என்ற பூனை பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், டிரஸ்சின் பதவி விலகலை தொடர்ந்து வெளியான செய்தியில், அரசர் மூன்றாம் சார்லஸ், தன்னை நாட்டின் பிரதமர் பதவியை ஏற்று கொள்ளும்படி கூறியிருக்கிறார்.
ஏனெனில், இந்த முட்டாள்தனம் நீண்ட நாட்களாக நீடித்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் எப்போதும் நகைச்சுவையான தகவல்களை வெளியிடுவது வழக்கம்.
கடந்த ஜூலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து எம்.பி.க்கள் பலர் பதவி விலகினார்கள். இதனை தொடர்ந்து, லேர்ரி பூனையும் டுவிட்டரில் தனது பதவி விலகல் செய்தியை பகிர்ந்து கொண்டது.
என்னால், தொடர்ந்து நல்ல மனசாட்சியுடன் இந்த பிரதமருடன் வசிக்க முடியாது. ஒன்று அவர் போகட்டும். அல்லது நான் போகிறேன் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அமைச்சரவை அலுவலகத்தின் சீப் மவுசர் ஆனது, போட்டோஷாப் செய்யப்பட்ட சிறிய மேடை முன் லேர்ரி பூனை நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து இருந்தது. அதற்கு அடுத்த நாள் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார்.