< Back
உலக செய்திகள்
பெருவில் காஸ்டிலோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்; தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
உலக செய்திகள்

பெருவில் காஸ்டிலோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்; தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
7 Jan 2023 10:25 PM IST

தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளதால் பெரு-பொலிவியா எல்லையில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

லிமா,

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது.

இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த 2021 ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இதனிடையே பெட்ரோ காஸ்டிலோ, பெரு நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாகவும், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்டுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார்.

இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். மேலும் பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் காஸ்டிலோ அதிபர் பதவியை இழந்தார். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதற்காக அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக துணை அதிபராக இருந்த 60 வயதான பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில் தன்னை காவலில் இருந்து விடுவிக்குமாறு காஸ்டிலோ தாக்கல் செய்த மனுவை பெரு நாட்டின் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யவும், டினா பொலுவார்டே பதவி விலகவும் வலியுறுத்தி காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் பெரு நாட்டில் பல இடங்களில் போராட்டக் களமாக காட்சியளிக்கிறது. மேலும் போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளதால் பெரு-பொலிவியா எல்லையில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நாட்டிற்குள் நுழையவும் முடியாமல், திரும்பிச் செல்லவும் முடியாமல் வாகன ஓட்டிகள் பலர் தவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்