கால்பந்து உலகக்கோப்பைக்கு தயார் செய்யப்பட்ட சொகுசு கேரவன்கள்; துருக்கி, சிரியாவிற்கு அனுப்பியது கத்தார் அரசு
|பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சொகுசு கேரவன்களை துருக்கி, சிரியாவிற்கு கத்தார் அரசு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோகா,
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண சர்வதேச நாடுகளில் இருந்து ரசிகர்கள் கத்தாருக்கு வருகை தந்தனர். அவர்கள் தங்குவதற்காக பல்வேறு வசதிகளை கத்தார் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
அதில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கண்டெய்னர்களைக் கொண்டு சொகுசு கேரவன்கள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த சொகுசு கேரவன்களை தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க கத்தார் அரசு முடிவு செய்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 42 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகிவிட்ட நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து கொட்டும் பனியில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை துருக்கி, சிரியா ஆகிய நாடுகளுக்கு கத்தார் அரசு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 350 கேரவன்களை துருக்கி, சிரியாவிற்கு கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.