பிரான்சில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கூட்டத்துக்குள் புகுந்த கார்
|பிரான்சில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் பாஸ்-டி-கலாய்ஸ் மாகாணத்தில் உள்ள பெர்க் கம்யூன் நகரில் நேற்று முன்தினம் மாலை சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பட்டம் விட்டனர்.
அப்போது அங்குள்ள சாலையில் வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பட்டம் விட்டுக்கொண்டிருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. கார் மோதியதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான 76 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.