< Back
உலக செய்திகள்
சிரியாவில் நோன்பு முடித்து ஷாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு:  7 பேர் பலி; 30 பேர் காயம்
உலக செய்திகள்

சிரியாவில் நோன்பு முடித்து ஷாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 30 பேர் காயம்

தினத்தந்தி
|
31 March 2024 8:32 AM IST

ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் வந்தபோது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

அம்மன்,

துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய சந்தை பகுதியில், கார் ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நேற்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர், போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

எனினும், இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில், இந்த நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை அமைதியாக காணப்பட்டது.

இந்நிலையில், இந்த பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. சிரியாவின் வடமேற்கு எல்லை பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

மேலும் செய்திகள்