பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறுத்த புதின்- என்ன காரணம் தெரியுமா?
|ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
சமர்கண்ட்,
உஸ்பெஸ்கிதானில் நடைபெற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, " இந்தியாவும் ரஷியாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்றார்.
இதை தொடர்ந்து பேசிய ரஷிய அதிபர் புதின், "நண்பர் மோடி நாளை பிறந்தநாள் கொண்டாடப் போகிறார் என எனக்கு தெரியும். ஆனால் ரஷ்ய பாரம்பரிய முறைப்படி முன்கூட்டியே வாழ்த்து சொல்வது இல்லை. அதனால் என்னால் இப்போது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முடியாது. நட்பான இந்திய தேசத்திற்கு எங்கள் நல்வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா செழிக்க வாழ்த்துகிறோம்." என்றார். பிரதமர் மோடி நாளை தனது 72-வது பிறந்தநாளை கொண்டாகிறார்.