< Back
உலக செய்திகள்
கனடா பிரதமரின் புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு; தூதரக உறவில் தொடரும் விரிசல்
உலக செய்திகள்

கனடா பிரதமரின் புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு; தூதரக உறவில் தொடரும் விரிசல்

தினத்தந்தி
|
23 Sept 2023 11:52 AM IST

நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசாங்க ஏஜெண்டுகளுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தக்க தகவல்கள் சில வாரங்களுக்கு முன் இந்தியாவிடம் பகிரப்பட்டன என கனடா பிரதமர் ட்ரூடோ மற்றொரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

டொரண்டோ,

கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக, பல்வேறு முறை கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது.

2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றது. இதன்பின் 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் போலீசார் கேட்டு கொண்டனர்.

இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. இந்த சூழலில் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் ட்ரூடோ இன்று புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறும்போது, இந்தியாவை பற்றி கடந்த திங்கட் கிழமை நான் பேசிய விசயங்களை பற்றி நம்பத்தக்க குற்றச்சாட்டுகளை அந்நாட்டிடம் இந்தியா பகிர்ந்து உள்ளது. சில வாரங்களுக்கு முன்பே அதனை நாங்கள் செய்து விட்டோம் என கூறியுள்ளார். இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ பணியை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.

அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், இந்த தீவிர விவகாரத்தின் அடித்தளம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது இன்று கூறினார்.

நிஜ்ஜார் படுகொலையை இந்தியாவுடன் முதலில் தொடர்புப்படுத்தி ட்ரூடோ பேசினார். இதனை இந்தியா மறுத்தது. இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குறிப்பிட்ட தகவல் எதனையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தது.

இந்திய தூதரை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக கனடா தூதரை வெளியேறும்படி கடந்த செவ்வாய் கிழமை இந்தியா உத்தரவிட்டது. கடந்த வியாழ கிழமை, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறும்போது, அரசியல்ரீதியாக தூண்டப்பட்டுள்ளது என கூறினார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடியிடம், கனடா பிரதமர் ட்ரூடோ கூறினார் என்றும் அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன என்றும் மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பொன்று தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், கனடாவில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு, விசா சேவையையும் இந்தியா சஸ்பெண்டு செய்தது. இந்த சூழலில், கனடா பிரதமரின் புதிய குற்றச்சாட்டால் தூதரக உறவில் தொடர்ந்து விரிசல் அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகள்