< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்

தினத்தந்தி
|
16 Aug 2023 10:27 PM GMT

ஹவாய் காட்டுத்தீ விபத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இந்த நிலையில் ஹவாய் மாகாண தீவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் செல்ல உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்கள்தொகையை தவிர்த்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது. மளமளவென தீப்பற்றி எரிந்தநிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகி நாசமாகின.

106 பேர் பலி

வீடுகள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகி நாசமாகின. சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவல் குறையாத காரணத்தினால் சேத மதிப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர்.

இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் தீயில் கருகி உயிரிழந்தவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹலைனா நகரை சேர்ந்த அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பைடன் செல்கிறார்

மீட்பு பணிகளில் உதவும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறும் பணியும் நடக்கிறது. ஆள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவில் இருந்து ராணுவம் களம் இறங்கியது. இந்தநிலையில் ஹவாய் தீவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செல்லவுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் மில்வாக்கி மாகாணத்தில் அவர் பேசும்போது, "ஹவாய் சந்திந்துள்ள பேரழிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகளை பார்வையிடும் வகையில் நான் அங்கு கூடிய விரைவில் செல்ல உள்ளேன்" என்றார்.

அவசர நிலை பிரகடனம்

இந்த நிலையில் கனடாவின் வடமேற்கு மாகாணங்களிலும் கட்டுங்கடங்காமல் காட்டுத்தீ பரவுகிறது. தெற்கு மற்றும் வடமேற்கு ஸ்லேவ் பகுதிகளில் நிலைமை கைமீறி போனதை அரசு அறிந்துள்ளது. இதனால் காட்டுத்தீ பரவி இருக்கும் பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தி மீட்புப்பணியில் மீட்பு பணிவீரர்களை களம் இறக்கியுள்ளது.

மேலும் செய்திகள்