உக்ரைனுக்கு ரூ.200 கோடி வழங்கிய கனடா
|சுமார் ரூ.200 கோடியை உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் கூட்டமைப்புக்கு கனடா அரசாங்கம் வழங்கி உள்ளது.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் சேர முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. அப்போது தொடர்ந்து நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்தது. இதனையடுத்து உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு மற்றும் தேசிய உள்கட்டமைப்பை வழங்குவதற்காக இங்கிலாந்து தலைமையிலான ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் உள்ள கனடா, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை இதன் மூலம் வழங்கி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அவர் உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது சுமார் ரூ.200 கோடியை உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் இந்த கூட்டமைப்புக்கு கனடா அரசாங்கம் வழங்கி உள்ளது.