< Back
உலக செய்திகள்
ரஷியாவுடனான இந்தியாவின் உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும்-அமெரிக்கா
உலக செய்திகள்

ரஷியாவுடனான இந்தியாவின் உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும்-அமெரிக்கா

தினத்தந்தி
|
11 July 2024 10:58 AM IST

ரஷியாவுடனான இந்தியாவின் உறவு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

2 நாட்கள் பயணமாக ரஷியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷியா இடையேயான 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டில் அவர் அதிபர் புதினை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக உக்ரைன் போர் குறித்து இருநாட்டு தலைவர்களும் தீவிரமாக விவாதித்தனர். அப்போது, உக்ரைன் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல, போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு அனைத்து விதமான பங்களிப்பையும் ஆற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் புதினிடம் மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரீன் ஜீன்-பியரிடம் மோடி-புதின் சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்து பேசிய கரீன் ஜீன்-பியர், "உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு அளிப்பதை முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டியது அவசியம்.

ரஷியாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதிக்கான நடவடிக்கையை எடுக்கவும் அந்நாட்டு அதிபர் புதினை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. போரை தொடங்கிய புதினால், அதனை முடிக்க முடியும்" என கூறினார்.

மேலும் செய்திகள்