கனடாவில் பனிப்புயல்: சாலையில் கவிழ்ந்து, உருண்ட பஸ்; 4 பேர் பலி
|கனடாவில் பனிப்புயல் காரணமாக சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
ஒட்டாவா,
அமெரிக்காவில் வீசி வரும் கடுமையான பனிப்புயல் அங்குள்ள பல்வேறு மாகாணங்களை புரட்டி போட்டு வருகிறது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்த பயங்கர பனிப்புயல் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவையும் பாதித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா, மாண்ட்ரீல் உள்ளிட்ட பல மாகாணங்கள் பனிப்புயலின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலோவானா நகரில் இருந்து வான்கூவர் நகர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பனிப்புயலால் சாலை முழுவதும் பனிக்கட்டியாய் மாறியிருந்தது. இதனால் அந்த சாலையில் சென்ற பஸ் பனியில் சறுக்கி கவிழ்ந்தது. இதில் பஸ் பல முறை உருண்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.