< Back
உலக செய்திகள்
மெக்சிகோவில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற பஸ் கடத்தல்
உலக செய்திகள்

மெக்சிகோவில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற பஸ் கடத்தல்

தினத்தந்தி
|
19 May 2023 12:55 AM IST

அமெரிக்காவின் மிசூரி மாகாணம் மேட்ஹுவாலா என்ற பகுதி அருகே சென்றபோது மர்ம கும்பலால் பேருந்து கடத்தப்பட்டது.

மெக்சிகோ சிட்டி,

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த குடியேற்ற கொள்கைகள் சமீபத்தில் காலாவதியானது. இதனால் அமெரிக்காவில் நுழையும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்து வருகிறது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் அண்டை நாடான மெக்சிகோ வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சட்ட விரோதமாக நுழைந்து வருகின்றனர்.

மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்காவுக்கு 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் அமெரிக்காவின் மிசூரி மாகாணம் மேட்ஹுவாலா என்ற பகுதி அருகே சென்றபோது மர்ம கும்பலால் கடத்தப்பட்டது.

இதனையடுத்து பஸ்சில் இருந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.82 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் தேசிய கூட்டமைப்பு அலுவலகம் கூறியது. பின்னர் மெக்சிகோவின் நியூவோ லியோனில் இந்த பஸ் பயணிகள் யாரும் இல்லாமல் நின்றது.

இதனையடுத்து போலீசார் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்