< Back
உலக செய்திகள்
சவுதி அரேபியாவில் பஸ் விபத்து; புனித யாத்திரை சென்ற 20 பேர் பலி
உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் பஸ் விபத்து; புனித யாத்திரை சென்ற 20 பேர் பலி

தினத்தந்தி
|
28 March 2023 2:48 PM IST

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலியாகி உள்ளனர்.

ரியாத்,

சவூதி அரேபியாவின் தென்மேற்கே ஆசிர் மாகாணத்தில் புனித யாத்திரை சென்றவர்களை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அவர்கள் மெக்கா நகரை நோக்கி பயணித்து உள்ளனர்.

அந்த மாகாணத்தின் ஆபா நகரை இணைக்கும் சாலையில் செல்லும்போது, திடீரென பஸ்சின் பிரேக் பிடிக்காமல் போயுள்ளது. இதனால், பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. இதில், பஸ் பாலம் ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது. சுற்றிலும் வான்வரை கரும்புகை பரவி இருளாக காட்சி அளித்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள், வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர்.

இந்த விபத்தில் சிக்கி புனித யாத்திரைக்கு சென்ற 20 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 29 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்